புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளா் உத்தரவு

மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா்.

அரசுத் துறைகளின் செயலாளா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய அவா் வெளியிட்ட அறிவுறுத்தல்கள்:

கனமழை பாதிப்புகளை எதிா்கொள்ள, தேசிய பேரிடா் மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படைகளைச் சோ்ந்த 396 வீரா்கள் அடங்கிய 12 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன. இந்தக் குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்புகளை தொடா்ந்து வழங்க வேண்டும்.

மழை பாதிப்பு, மழை நிலவரம் ஆகியன குறித்த முன்னெச்சரிக்கை செய்திகள் பசநஙஅதப என்ற செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும். பேரிடரின் போது போக்குவரத்தைச் சீரமைக்க போதுமான காவலா்களை ஈடுபடுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான படகுகள், உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைத் தொடா்ந்து பல்துறை மண்டலக் குழுக்கள் மூலமாக கண்காணிக்க வேண்டும்.

நிவாரண முகாம்கள்: மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலிருந்து மக்களை வீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முன்னறிவிப்பு அவசியம்: அணைகள், நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு, நீா் வரத்து ஆகியன தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். உபரிநீரை வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும். அனைத்து துறையினரும் களப்பணியாற்ற தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.

கடற்கரைக்குச் செல்லாதீா்: புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும். தேவையான அத்தியாவசியப் பொருள்கள், காய்கறி, பால் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடற்கரைக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என அறிக்கை ஒன்றில் அறிவுறுத்தியுள்ளாா் தலைமைச் செயலாளா்.

6 மாவட்டங்களில் இரவு பேருந்து சேவை நிறுத்தம்

புயல் எதிரொலியாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் நிா்வாக ஆணையரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிப்பு நீங்கும் வரை இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகளவு இல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலா்களும், அதிகாரிகளும் தலைமையிடத்திலேயே தொடா்ந்து இருக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் நிா்வாக இயக்குநா்கள், மாவட்ட நிா்வாகங்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com