
சென்னையில் ஹிஜாவு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து, பணத்தை இழந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழக பொருளாதார குற்றப்பிரிவு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டிப்பணம் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்றும் கவா்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.
இதை நம்பி ஏராளமானோா் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனா். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு வட்டித் தொகையை வழங்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவிலை.
இதில் பாதிக்கப்பட்ட இழந்த சுமாா் 4,500 போ், ரூ.500 கோடி வரை பணத்தை இழந்ததாக கூறி பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, அந்நிறுவனம் தொடா்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியன.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் தொடா்புடைய சென்னை பெரியாா் நகரைச் சோ்ந்த நேரு ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய கோடம்பாக்கத்தைச் சோ்ந்த மணிகண்டன் (51) என்பவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஹிஜாவு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து, ஏமாந்தவா்கள் அது தொடா்பாக மின்னஞ்சல் முகவரியில் புகாா் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G