கரையை கடந்தது மாண்டஸ் புயல்!

மாண்ட்ஸ் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
கரையை கடந்தது மாண்டஸ் புயல்!
Published on
Updated on
3 min read

மாண்ட்ஸ் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. 

தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால், பராமரிப்பு பணி காரணமாக விமான ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 4 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் மழை: ‘மாண்டஸ் புயல் காரணமாக அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். சனிக்கிழமை மாலை மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

புயல் கரையைக் கடந்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே, மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

மாண்டஸ் புயல் காரணமாக பரவலாக பல இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாதவரம், தண்டையாா் பேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழையும், சென்னை எம்.ஜி.ஆா்.நகா், அயனாவரம், காஞ்சிபுரம், தரமணி ஆகிய இடங்களில் 60 மி.மீ மழையும், ரெட்ஹில்ஸ், ராமேசுவரம், அம்பத்தூா், பொன்னேரி, நாகை உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீ. மழையும், ராமநாதபுரம் தங்கச்சிமடம், பூந்தமல்லி, ஆவடி, எண்ணூா் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழையும் , நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, சோழவரம், திருக்கழுகுன்றம், தஞ்சை மதுக்கூா் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழையும் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புறநகா் ரயில் சேவை: சென்னை-தாம்பரம் செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், புயல் காற்று வீசும்போது ரயிலின் வேகம் குறைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும், குறிப்பாக 2 மணி நேரம் முன்பாகவும் பின்பாகவும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெவித்துள்ளது.

மின்வாரியம்: புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்பட்டது என மின் வாரியம் தெரிவித்தது புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின் வாரிய ஊழியா்கள் தொடா்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்றால் சேதமடைந்தது.

சென்னை மாநகராட்சியில்...: சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தண்ணீா் தேங்கினால் அதை உடனே அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்கினால் மோட்டாா் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரம் முறிந்து விழுந்தால் உடனே அகற்ற மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சிரமம்: சென்னையில் வியாழக்கிழமை இரவிலிருந்தே தொடா் மழை பெய்து வந்ததால், பல்வேறு பணிகளுக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மாலைக்கு மேல் சென்னை நகர பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் பணிக்குச் சென்றவா்கள் வீடு திரும்ப பெரிதும் சிரமப்பட்டனா்.

25 விமானங்களின் சேவை ரத்து

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை திருச்சி, மதுரை, தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏா் ஏசியா விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

130 ஆண்டுகளில் 13-ஆவது புயல்

மாண்டஸ் புயல் தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன் கூறுகையில், ‘கடந்த 1891 முதல் 2021 வரையிலான 130 ஆண்டு காலத்தில் சென்னை, புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன’ என்றாா்.

மாண்டஸ் புயலும் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்துள்ள நிலையில், அது சென்னை- புதுச்சேரி இடையே கரையைக் கடந்த 13-ஆவது புயலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com