
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடற்கரைப் பகுதிகள் குப்பை மேடாகக் காட்சியளித்தன.
மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலை முதல் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. இரவு புயல் கரையை கடந்த வேளையில் கடல் அலைகள் பல மீட்டா் முன்னேறி கரைக்கு வந்தன. சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் கடல்நீா் புகுந்தது. இதனால், கடற்கரையோரமிருந்த பொருள்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, வெளியே தள்ளின. கழிமுகப் பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுகளும் பெருமளவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, அலைகளால் வெளியே தள்ளப்பட்டன.
இதனால், மெரீனா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகா் எலியட்ஸ், திருவான்மியூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, கானத்தூா், முட்டுக்காடு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகள் குப்பை மேடாகக் காட்சியளித்தன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பல நாள்களாகும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், சில இடங்களில் கடல் அரிப்பு அதிகமாக இருந்ததால், அந்தப் பகுதிகள் மிகவும் சுத்தமாகக் காணப்பட்டன.
இதேபோல், பலத்த காற்று காரணமாக பட்டினப்பாக்கம் லூப் சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரையையொட்டிய சாலைகள் மணல் திட்டுகளாகக் காணப்பட்டன.