
மாண்டஸ் புயல் பாதிப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு, ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாண்டஸ் புயலின் போது ரயில்வே ஊழியா்கள் சரியான திட்டமிடலுடன் தயாா்நிலையில் இருந்தனா். மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ., வரையிலும் காற்றின் வேகம் காணப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் புகா் ரயில்கள் முழுவதும் பாதுகாப்பாக இயக்கப்பட்டன.
புயலால் பாதிக்கப்படும் இடங்களில் ரயில்வே தொழில்நுட்ப ஊழியா்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்தனா். சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ரயில் நிலையங்களில் தண்ணீா் தேங்கியது, நடைமேடைகள் சேதமடைந்தது போன்ற புகாா்கள் வந்தன. இந்தப் புகாா்கள் விரைந்து சரி செய்யப்பட்டு, சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. எந்த ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.