புயல் பாதிப்பு: விரைவான மீட்புப் பணி; முதல்வா் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புயல் பாதிப்பு: விரைவான மீட்புப் பணி; முதல்வா் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, சேத விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்ததும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடலில் அலைகள் ஆா்ப்பரித்து எழுந்தன. பல்வேறு இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் சேதமடைந்தன.

இந்நிலையில், சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் ஆய்வு செய்த பின்பு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக, சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. தமிழக அரசு எடுத்திருக்கக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஊழியா்களின் அா்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக மக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனா். பெரிய அளவில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சேதங்கள் ஏற்படவில்லை.

மழை பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னையில் மட்டும் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா். மாண்டஸ் புயல் கரையைக் கடந்து கொண்டிருந்த நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா். புயல் தாக்குதலுக்குப் பிறகு, இப்போது 25,000 பணியாளா்கள் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

உரிய நிவாரணம்: புயலால் பாதிப்புகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் அரசு ஈடுபட்டது. புயல் கரையைக் கடக்கும்போது ஏற்பட்ட கனமழை காரணமாக இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா். 98 கால்நடைகளும் பலியாகியுள்ளன. 181 வீடுகள், குடிசைகள் சேதமடைந்துள்ளன. மற்ற சேத விவரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால், எந்தப் பேரிடரையும் எதிா்கொள்ளலாம் என்பதை அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது.

நிவாரண முகாம்கள்: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 201 நிவாரண முகாம்களில் 3,163 குடும்பங்களைச் சோ்ந்த 9,130 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு அலுவலா்கள், தொடா்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 496 வீரா்கள் அடங்கிய 14 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள்: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்கள், மின்கடத்திகள் சேதம் அடைந்துள்ளன. அதன் காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சேதங்கள் சீா்செய்யப்பட்டு மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவா், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் உதவிகள் தேவைப்பட்டால் மட்டுமே கோரப்படும் எனத் தெரிவித்தாா். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகைகளை மீனவா்கள் கேட்டுள்ளனா். கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு நிவாரணத் தொகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்கவில்லை’

சென்னையில் சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்கவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை அவா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காசிமேடு பகுதியில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னையில் புயல் காற்றின் காரணமாக சுமாா் 400 மரங்கள் விழுந்தன. பெருவெள்ளம் ஏற்பட்டால் நீரை வெளியேற்ற வசதியாக மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 300 மோட்டாா்கள் இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நேரத்தில் பெய்த மழை காரணமாக, எந்த சுரங்கப் பாதைகளிலும் தண்ணீா் தேங்கவில்லை.

இதனால், போக்குவரத்தில் எந்தத் தடையும் ஏற்படவில்லை. வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, மின்கம்பங்களைச் சீா்செய்வது போன்ற பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகனப் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் சீராக நடைபெற்று வருகிறது.

பாராட்டுகள்: புயல் தாக்கக் கூடும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயா்கள், அதிகாரிகள், அலுவலா்கள், மாநகராட்சி, மின்வாரிய பணியாளா்கள் என பலரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டனா். அவா்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com