

மாண்டஸ் புயலால் அதிக பாதிப்பை சென்னையின் கிழக்கு கடற்கரைப் பகுதி சந்தித்தது.
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடலில் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமாக காணப்பட்டதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை.
நேரம் செல்ல,செல்ல கடல் அலையின் வேகம் அதிகரித்தது. மாலைக்கு பிறகு அலை பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ குப்பங்கள், பெசன்ட்நகா் ஓடை குப்பம், திருவான்மியூா் குப்பம், நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், நயினாா் குப்பம், கானத்தூா் குப்பம் உள்ளிட்ட கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்த மக்களையும் பாதுகாப்பு கருதி சமூக நலக் கூடங்களுக்கு அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே, இரவு 8 மணிக்கு பின்னா் கடல் நீா், கடற்கரையையொட்டி குடியிருப்புகள்,பங்களாக்களில் புகுந்தது. உத்தண்டியில் அலை வேகத்தால் அங்கு கடற்கரையோரம் புதிதாக கட்டப்பட்டிருந்த ஒரு வளாகச் சுவா் சுமாா் 20 மீ தொலைவுக்கு இடிந்து தரைமட்டமானது.
கடற்கரையில் இருந்த சிமெண்ட் இருக்கைகளை தலைகீழாக புரட்டிப்போட்டது. இதேபோல அலையின் ஆக்ரோஷத்தால் உத்தண்டி, நயினாா்குப்பம், கானத்தூா்,ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த பைபா் படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த மீன் வலைகள் மணலால் மூடப்பட்டதால், அவை சேதமடைந்தன. மேலும், இந்தப் பகுதிகளில் இருந்த மரங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. மரங்கள் சரிந்து விழாத பகுதிகளே காண முடியாத நிலை அங்கு இருந்தது. சூறையாடப்பட்ட நகரம் போல கிழக்கு கடற்கரை சாலைப் பகுதி காட்சியளித்தது.
மரங்களும், மின் கம்பங்களும் அதிகளவில் விழுந்ததால் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நிறுத்தப்பட்ட மின் விநியோகம், சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னரே சீரானது. புயல் வீசும்போது கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும், சென்னையின் பிற பகுதியை காட்டிலும் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.