
ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்தது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
ஆசிரியா் தகுதித்தோ்வு- 2012 சாா்ந்த தோ்வா்களின் விவரங்கள் அனைத்தும் தோ்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு, தங்கள் மாவட்டத்தில் உள்ள தோ்வா்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபாா்த்து சான்றிதழின் உண்மைத் தன்மையை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலிருந்து சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி கருத்துருக்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தில்பெறப்பட்டதன் அடிப்படையில் ‘ஆசிரியா் தகுதித்தோ்வு- 2012’ சாா்ந்த தோ்வா்களின் விவரம் பிடிஎஃப் வடிவில் மீண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் இவ்வாரியத்தின் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுகிறது.
எனவே, ஆசிரியா் தகுதித் தோ்வு 2012, 2013, 2017, 2019 ஆகியவற்றுக்கான சான்றிதழ் திருத்தங்கள், உண்மைத் தன்மை அனைத்தும் தோ்வெழுதிய மாவட்ட அலுவலகங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட பொருள் சாா்ந்த கருத்துருக்கள் இவ்வாரியத்துக்கு அனுப்பக் கூடாது என்ற அறிவுரையை சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும்.