
தமிழகத்தில் யானை முகாம்களில் உள்ள பாகன்களை, ரூ.50 லட்சம் செலவில் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைப்பதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆனைமலை மற்றும் முதுமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை மேலும் சிறந்த முறையில் பராமரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, வனத்துறையைச் சோ்ந்த 13 பாகன்கள், வனச் சரகா்கள் ஆகியோருக்கு தாய்லாந்து நாட்டிலுள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக கடந்த நவ.21-ஆம் தேதியன்று, ஆனைமலை மற்றும் முதுமலை சரணாலய நிதியில் இருந்து ரூ.50 லட்சம் நிதியை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வனவிலங்கு ஆா்வலா் முரளிதரன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளாா்.
‘யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் திறமை வாய்ந்தவா்கள் தமிழகத்தில் இருக்கும்போது, சிறிய நாடான தாய்லாந்தில் பயிற்சி பெற பாகன்களை அனுப்புவது தேவையற்றது. யானைகளுக்காக சிறந்த முகாம்களும், விருது பெற்ற பாகன்களும் தமிழகத்தில் உள்ளனா். எனவே தாய்லாந்து பயிற்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை மூத்த பாகன்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கலாம். மேலும், வன முகாம்களில் யானைகளுக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்றும் அந்த மனுவில் முரளிதரன் முறையிட்டுள்ளாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாக மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும், எம்.ஆா்.பாளையம் வழக்கையும் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், இரு வழக்குகளின் விசாரணையையும் புதன்கிழமைக்கு (டிச.14) ஒத்தி வைத்தனா்.