இது குளிர்காலம்: நாய்க்கடி மருந்துகளின் இருப்பில் கவனம் தேவை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க் கடிக்கு போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.


சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க் கடிக்கு போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் நாய்க்கடித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறதே தவிர, நாய்க்கடி மருந்துகள் இருப்பு இல்லை என்று கூறப்படுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக உள்ளது. சென்னையில் இருப்பவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை நாடுமாறும் அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சில ஆயிரங்களைச் செலவிட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். ஆனால், வசதியில்லாதவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று நாய்க்கடிக்கு மருந்து போட வேண்டும் என்றால், அன்றைய கூலி கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலையில், நாய்க்கடியை மறந்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். 

நாய்க்கடியின் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு க்யூமன் டிப்ளாய்டு செல் வேக்ஸின் என்னும் ஊசி மருந்து போடப்படுகிறது. இந்த மருந்து வெளிச் சந்தையில் ஒரு வயலால் (20 மி.லி.) ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த மருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாகத்தான் போடப்படுகிறது.

எனவே, எந்தவொரு சிகிச்சைக்கும் தனியார் மருத்துவமனைக்குச் செல்வோர் கூட, நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளையே நாடுவதும் வழக்கமாக உள்ளது.

குளிர்காலம் என்பதால், சென்னை மாநகராட்சி கவனத்தில் கொண்டு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான நாய்க்கடி மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னையின் பெரும்பாலான சாலைகள் நாய்களால் நிறைந்துள்ளன. சாலையில் சுற்றித்திரியும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், அவ்வழியாகச் சென்று வருவோருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறி வருகின்றன. குறிப்பாக உணவகங்கள், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களில் வெளியே கொட்டப்படும் உணவுக்காக ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதாலும், சாலையின் குறுக்கே ஓடி வருவதாலும் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

சாலையில் நடந்து செல்வோரை மட்டுமல்ல, வாகனத்தில் செல்வோரை கூட்டமாக குரைத்துக்கொண்டே துரத்திச் செல்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

இவ்வளவு ஏன், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூட, ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதைப் பார்க்க நேரிடுகிறது. 

நாய்க்கடித்தால்..
தடுப்பூசி போடப்பட்ட நாய்க்கடித்தால், நாய்க்கடிக்கு ஆளானவர் ஊசி போட்டுக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், நாய்க்கடிக்கு ஆளானவர் சிகிச்சை பெற வேண்டும் என்பதே சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலாக உள்ளது.

நாய்க்கடித்ததும் ரத்தம் வந்துவிட்டால் வைரஸ் உள்ளே செல்லாது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. உண்மையில்லை. நிச்சயம் சிகிச்சை பெறவேண்டும்.

நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வெளியிலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாகப் பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக குளிர்காலம், நாய்களின் இனப்பெருக்கத்துக்கான காலம் ஆகும். இந்த தருணத்தில் நாய்களுக்கு வெறி நோய் அதிகம் ஏற்படும். இந்த நோய் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் அதற்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திலேயே போட்டுக்கொண்டால், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com