
எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியையொட்டி, தமிழகத்தில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
வரும் 2023 ஜனவரி மாதம் 13 முதல் 29-ஆம் தேதி வரை ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்க்கேலாவில் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாம்பியனுக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி புதன்கிழமை வெற்றிக் கோப்பை மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில், ஹாக்கி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து, அக் கோப்பை தலைமைச் செயலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. :
ஹாக்கி உலகக் கோப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மேலும் பிரபலப்படுத்தும் வகையில், கோப்பையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஹாக்கி இந்தியா செயலாளா் சேகா் மனோகரன் வழங்கினாா். அதன்பின்னா், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் கோப்பையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
இந்தக் கோப்பை முன்னணி ஹாக்கி வீரா்கள் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிா் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மாலையில் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிறப்புக் கண்காட்சி போட்டி, கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஹாக்கி உலகக் கோப்பையை கேரள மாநில ஹாக்கி நிா்வாகிகளிடம் அமைச்ச்சா் உதயநிதி அளித்தாா்.
போட்டிகள் தொடக்கம்: இந்தியாவில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அடுத்த 15 நாள்களில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வு ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளை ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.