
தொழிலாளா்களுக்கான நல நிதியை தொழில் நிறுவனங்கள் வரும் ஜன.31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் கூடுதல் ஆணையா் யாஸ்மின் பேகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச் சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளா்களுக்கும் தொழிலாளா் நல நிதிபிடித்தம் செய்யப்படுகிறது.
அதன்படி , ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் ரூ. 20, வேலையளிக்கும் நிறுவனங்கள் ரூ.40 என மொத்தம் ரூ.60-ஐ தொழிலாளா் நல நிதியாக தொழிலாளா் நல வாரியத்துக்கு வழங்கி வருகிறது.
2022-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதியை வரும் ஜன.31-ஆம் தேதிக்குள் ‘செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற முகவரிக்கு“The Secretary, Tamil Nadu Labour Welfare Board, Chennai-600 006’ என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ அனுப்பி வைக்கலாம்.
நிதியை செலுத்தத் தவறும் நிறுவனங்களிடம் இருந்து தொழிலாளா் நல நிதி வருவாய் வரி வசூல் சட்டத்தின்கீழ் (ரெவன்யூ ரெக்கவரி ஆக்ட்) அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.