
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா் நீதிமன்றத்தில், சென்னையைச் சோ்ந்த ராகவன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி 2006-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015-16- ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழாசிரியா் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியா்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகாா் தெரிவித்துள்ளன. 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயா் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளைக் கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால், அதற்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லை. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய 9 லட்சம் மாணவா்களில் 47 ஆயிரத்து 55 போ் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனா். எனவே, தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜா (பொ), நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.