பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறுமா?

வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கவுள்ள பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு இடம் பெறுமா என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடாதது, விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறுமா?

வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கவுள்ள பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு இடம் பெறுமா என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடாதது, விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
 பெரியாறு பாசனத்துக்குட்பட்ட மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், காவிரி பாசனத்துக்குட்பட்ட டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களிலும், மணல்பாங்கான வயல்களில் ஆண்டுதோறும் பொங்கல் கரும்பு (செங்கரும்பு) சாகுபடி செய்யப்படுகிறது.
 டெல்டா மாவட்டங்களைப் பொருத்தவரை திருச்சி மாவட்டம், திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, பனையபுரம், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, அம்மாபேட்டை, திருவையாறு, மயிலாடுதுறை மாவட்டம், அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, திருவாவலங்காடு, வானாதிராஜபுரம், மன்னன்பந்தல், திருமணஞ்சேரி, திருவாரூர் மாவட்டம், நெடுவாக்கோட்டை, தேரையூர், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இவை தவிர, விழுப்புரம் மாவட்டப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க பரப்பில் பொங்கல் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படும்.
 மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மேலூர், அலங்காநல்லூர் , மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கரும்பு பிரியர்களிடையே, மேலூர் கரும்புக்கு தனி முக்கியத்துவம் உண்டு என்ற வகையில், மதுரை மாவட்டத்தில் அதிகளவாக சுமார் 1,800 ஏக்கர் முதல் 2 ஆயிரம் ஏக்கர் வரை மேலூரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
 பயிர்க் காப்பீடு, வங்கிக் கடன், மானியம் போன்ற எந்த உதவியும் பொங்கல் கரும்பு சாகுபடிக்குக் கிடையாது என்ற நிலையிலும், பாரம்பரியத்தைக் கைவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடிக்கும் முக்கியத்துவம் அளித்து வந்தனர். இருப்பினும், சர்க்கரை நோயின் தாக்கம், மாறி வரும் வாழ்வியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால் பொங்கல் கரும்பு மீதான ஆவல் மக்களிடையே குறைந்தது. இதனால், பொங்கல் கரும்பு சாகுபடி பரப்பிலும் சரிவு ஏற்பட்டது.
 இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கரும்புத் துண்டுகளை வழங்க அரசு முன்வந்தது. இதனால், பொங்கல் கரும்பு சாகுபடி மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு முழு கரும்பு வழங்க அரசு முன்வந்ததால், பொங்கல் கரும்புக்கு உரிய விலையுடன் கூடிய கொள்முதல் பாதுகாப்பு கிடைத்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக முனைப்புக் காட்டி வருகின்றனர். நிகழாண்டிலும் கணிசமான பரப்பில் கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
 அந்த வகையில், ஆர்வத்துடன் பொங்கல் கரும்பு சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது, செய்வதறியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு இடம்பெறுமா? இல்லையா? என்பது குறித்து அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாததே காரணமாக உள்ளது.
 பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருள்கள் அனைத்தையும் தமிழக விவசாயிகளிடமிருந்தே அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பொங்கல் பரிசுத் தொகுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு என அரசுத் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதில், விவசாயிகளுக்குப் பல்வேறு கேள்விகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 இந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் குறித்து அமைச்சரவையில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அரசின் இந்த மெளனம் விவசாயிகளிடையே அச்சத்தை மேலும் அதிகரித்தது.
 இது தொடர்பாக பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம். முருகன் கூறியதாவது:
 பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு இடம்பெறுவது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா, இல்லையா என்பதை ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு அறிவித்தால், அதற்கேற்ப விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடியை மேற்கொள்வதா, கைவிடுவதா? என்பதைத் திட்டமிடலாம். கடந்த ஆண்டுகளில் கிடைத்த நம்பிக்கையின் பேரில், நிகழாண்டிலும் விவசாயிகள் கணிசமான பரப்பில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்தனர். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை அரசு வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
 மதுரை மாவட்டம், கூத்தப்பன்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஆனந்தகுமரன் கூறியதாவது:
 பொங்கல் கரும்பு சாகுபடிக்கான உற்பத்திச் செலவு மிகவும் அதிகம். சாகுபடிக் காலமான 9 மாதங்களுக்குள் 6 முறை கரும்பின் தோகையைப் பராமரிக்க வேண்டும், 3 முறை உரமிட வேண்டும், பூச்சித் தாக்குதலைப் பொருத்து 3 முதல் 4 முறைகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். இவை தவிர, அணில் போன்ற பிற உயிரினங்களிடமிருந்து கரும்புகளைப் பாதுகாக்க வேலிகள் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பட்டம் பிரிக்க வேண்டும் எனப் பல்வேறு பராமரிப்புப் பணிகள் பொங்கல் கரும்பு சாகுபடிக்கு அவசியமாகின்றன. ஓர் ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு சுமார் ரூ. 1.80 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை விவசாயிகள் செலவிட வேண்டியுள்ளது.
 ஏக்கருக்கு சுமார் 60 வண்டி கரும்புகள் (18,000) கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், மகசூல் திருப்தி அளிப்பதாகத்தான் உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முன்வந்தால்தான் விவசாயிகளுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.
 2021-ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்தது போல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் கரும்பு கொள்முதலை அரசு நேரடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்றார் அவர்.
 அதிகமான உற்பத்திச் செலவு, அதிகமான தண்ணீர் தேவை, எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவை போன்ற பல காரணங்கள் பொங்கல் கரும்பு சாகுபடிக்கு சவாலாக உள்ளன. இருப்பினும், பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், செங்கரும்பு சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கொள்முதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பு இடம்பெறும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com