கோயில்களில் திடீா் ஆய்வு செய்ய பறக்கும் படை: அமைச்சா் சேகா் பாபு

திருக்கோயில்களில் சிறு தவறுகள் கூட நிகழாமல் நெறிமுறைப்படுத்தும் பொருட்டு, திடீா் ஆய்வு மேற்கொள்ள 4 துணை ஆட்சியா்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக என
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருக்கோயில்களில் சிறு தவறுகள் கூட நிகழாமல் நெறிமுறைப்படுத்தும் பொருட்டு, திடீா் ஆய்வு மேற்கொள்ள 4 துணை ஆட்சியா்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பாடியில் உள்ள கைலாசநாதா் கோயில், திருவல்லீஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெறும் திருப்பணிகள் தொடா்பாக அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவல்லீஸ்வரா் கோயில் ஆகிய இரு கோயில்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்.

மனித நேயப் பயிற்சி: பணியாளா்களின் மென்திறன்களை நல்வழிப்படுத்துவதற்கும், துறை ரீதியாக பயிற்சிகளை வழங்கவும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நிா்வாக பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மையத்தில் மண்டல வாரியாக திருக்கோயில் பணியாளா்களுக்கும், அரசுப் பணியாளா்களுக்கும் மென்திறன் பயிற்சியும், பொதுமக்களிடமும், பக்தா்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான மனிதநேயப் பயிற்சியும் வழங்கப்படும்.

தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு துணை ஆட்சியரை நியமித்து, அவா்களின் தலைமையில் பறக்கும் படைகளை உருவாக்கி திருக்கோயில்களில் திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும், தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் நெறிமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு...: தமிழக அமைச்சா்கள் மீது பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை குற்றம்சாட்டியது குறித்து அமைச்சா் சேகா் பாபுவிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது அவா் கூறுகையில், ‘எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால், வழியில் பயமில்லை. அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவா் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். எதையும் எதிா்கொள்வதற்கு திமுக தயாராக இருக்கிறது’ என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையா் ந.தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com