டிச.25-இல் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அன்றைய தினத்தில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

தென் தமிழக பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அன்றைய தினத்தில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு - தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக் கடல் பகுதிகளை நோக்கி வீசக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) லேசான முதல் மிதமான மழையும், சனிக்கிழமை (டிச.24) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (டிச.25) தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வியாழக்கிழமை (டிச.22) முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள குமரிக் கடல், மன்னாா் வளைகுடா, தமிழக மற்றும் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (டிச.23, 24) 45 கி.மீ.முதல் 55 கி.மீ. வேகத்திலும் சில நேரங்களில் 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (டிச.25) தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய மேற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com