

சிறு தவறுகளுக்காக காவல் துறையினா் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா் நீதிமன்றத்தில், கோவையைச் சோ்ந்த வழக்குரையரும், மனித உரிமை ஆா்வலருமான சாரதி தாக்கல் செய்திருந்த மனுவில், சிறை மரணம் (லாக்கப் மரணம்) உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறையினா் ஈடுபடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சிறு தவறுகளுக்காக காவல் துறையினா் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அரசாணை வெளியிட்டுள்ளது.
காவல் துறையினா் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தாகும். மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே காவல் துறையினா் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு வியாழக்கிழமை தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பணி தொடா்பான விவகாரங்களில் எவ்வாறு பொது நல வழக்கு தொடா் முடியும்? என கேள்வி எழுப்பினா்.
பின்னா், விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.