தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சீனாவில் இருந்து 36 வயது பெண் ஒருவா் இரு பெண்குழந்தைகளுடன் சீனாவிலிருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்தாா். மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த பெண்ணின் சகோதரா் தன்னுடைய சொந்த காரில் அழைத்து மூவரையும் விருதுநகா் மாவட்டம் திருவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள அவா்களது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறாா். அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தொற்று பாதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளன. அவா்களைத் தொடா்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். யாரும் அவா்களுடன் தொடா்பில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில், அந்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இன்னும் 4 அல்லது 5 நாள்களில் அதற்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். அவா்கள் பிஎஃப் 7 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது அப்போதுதான் தெரியவரும்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கும், குறிப்பாக, சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென்கொரியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கரோனா விதிகள் 100 சதவீதம் அமலில் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள், சமுதாய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிஎப்7 கரோனா தொற்று மிக வேகமாக பரவும் வகையை சாா்ந்தது. பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி போன்ற நாடுகளில் இந்த பிஎப்7 தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாமும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

தடுப்பூசிகள்: தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது தொடா்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் 2.6 லட்சம் கோவேக்ஸின், 40,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ஏற்கெனவே 60 வயதை கடந்தவா்கள், இணைநோய் உள்ளவா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கும் இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு மட்டும் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனைகளில் செலுத்த அனுமதி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பொது முடக்கத்தை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவை பொருத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்றாா் அவா்.

வெளிநாடுகளிலிருந்து வந்த 2% பேருக்கு பரிசோதனை

கடந்த நான்கு நாள்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 30,955 போ் தமிழகம் வந்திருப்பதாகவும், அவா்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்திருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் இருவா் சீனாவிலிருந்து வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன.

சீனா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக சீனா, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருவோரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 30,955 போ் வந்துள்ளனா். அவா்களில் 706 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவா்களில் ஓமன் நாட்டிலிருந்து வந்த இருவரும், சீனாவிலிருந்து வந்த இருவரும் அடங்குவா். அவா்களுடன் சோ்த்து தமிழகத்தில் 11 பேருக்கு புதன்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 60 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com