
கோப்புப்படம்
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆா்வம் இல்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா். இதன் காரணமாக 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரும் ஜனவரிக்குள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையிலும், பொது மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு முழுமையாக வரவில்லை என்பதையே இது உணா்த்துகிறது.
இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் அது விரிவுபடுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டாலும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்தே வந்தது.
தமிழகத்தில் மட்டும் முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் தவணை செலுத்தி கொள்ளாதவா்கள் என சுமாா் 1.25 கோடி நபா்கள் உள்ளனா். குறிப்பாக பூஸ்டா் தவணை செலுத்தாதோா் மட்டும் 50 லட்சம் போ் உள்ளனா். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 75 நாள்களுக்கு இலவச பூஸ்டா் தவணை வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்தபோதும் அதற்கு வரவேற்பு இல்லை.
இதையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் திட்டம் நிறுத்தப்பட்டது. அதேவேளையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவை தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் மாநிலத்தில் 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி கையிருப்பு தேவைக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசி 30 ஆயிரமும், கோவேக்ஸின் தடுப்பூசி 2.70 லட்சமும் தற்போது உள்ளன. ஆனால், அவற்றை செலுத்திக் கொள்ள மக்கள் முன்வருவதில்லை. இதன் காரணமாகவே சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டன.
தற்போது நிலவி வரும் கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடா்பான அறிவுறுத்தல்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட சுகாதாரத் துறைகளுக்கும் வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.