மஸ்தான் கொலை நடந்தது எப்படி? கொலைக்கான பின்னணி என்ன? 

தொடக்கத்தில் தற்செயலாக நடந்த ஒரு மரணம் எனக் கருதப்பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என இப்போது தெரிய வந்துள்ளது முன்னாள் எம்.பி.யான மஸ்தானின் மரணம்.
மஸ்தான் கொலை நடந்தது எப்படி? கொலைக்கான பின்னணி என்ன? 

தொடக்கத்தில் தற்செயலாக நடந்த ஒரு மரணம் எனக் கருதப்பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என இப்போது தெரிய வந்துள்ளது முன்னாள் எம்.பி.யான மஸ்தானின் மரணம்.

முன்னாள் எம்.பி. மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததாக அவரது உறவினரான கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ள போலீசார், கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.  

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மஸ்தானின் மகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த  கூடுவாஞ்சேரி போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர்.

மஸ்தான் யார்? சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தவர் டாக்டா் மஸ்தான் தஸ்தகீர் (66). தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவா். 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்தாா். 

பின்னர் திமுகவில் இணைந்து, சிறுபான்மையினா் நலப் பிரிவில் பொறுப்பு வகித்து வந்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் பொறுப்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்தார். காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பழவேலி அருகே வந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

காவல் நிலையத்தில் புகார்: மஸ்தானின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ், தனது தந்தை டாக்டா் மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை கூறாய்வு செய்து, உரிய விசாரணை நடத்த கோரி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதன் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனா். முதல்கட்ட விசாரணையில் மஸ்தான் சந்தேகம் இருப்பது உறுதியான நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மஸ்தானுக்கு மரணம் ஏற்படுத்தப்பட்டது எப்படி? மஸ்தானின் உடலை உடல் கூறாய்வு செய்த மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலம், மஸ்தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில், மஸ்தான் இறந்த நாளான்று காரை ஓட்டிச் சென்ற மஸ்தானின் உறவினர் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அவர் மீதான சந்தேகத்தை போலீஸாருக்கு தீவிரப்படுத்தியது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். 

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று, மஸ்தான் தனது வீட்டிலிருந்து சென்ற கார் செங்கல்பட்டு சென்ற வழியில் நெடுகிலுமுள்ள கண்காணிப்புக் கேமராக்களையும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களையும் போலீசார் ஆய்வு செய்ததில் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகங்கள் வலுத்தன. மேலும், மஸ்தான் சென்ற காரில், இம்ரான் பாஷா தவிர, வழியில் மேலும் இரண்டு பேர் சேர்ந்து சென்றதும் தெரியவந்தது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை: இதையடுத்து, இம்ரான் பாஷாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தனது உறவினர் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் என்ன? இம்ரான் பாஷா அளித்த வாக்குமூலத்தில், டாக்டர் மஸ்தான், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர், அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனாகப் பெற்றேன். 

“தனது மகனின் திருமணத்தை சுட்டிக்காட்டி பணத்தைத் திரும்பக் கேட்டு மஸ்தான் தொந்தரவு செய்து வந்தார். இதனால், எனது உறவினர் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டினோம். மஸ்தான் முன்பு தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காகப் பலரைச் சந்தித்து வந்தார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 22 ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் வாங்கித்  தருவதாக கூறி, மஸ்தானை நம்ப வைத்து அவரை அழைத்துச் சென்றேன். 

காரில் இம்ரானும், தமீம் (எ) சுல்தான் மற்றும் அவரது நண்பர் நஷீர் ஆகியோருடன் பின்னால் அமர்ந்திருந்தனர். வேறு ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த தௌபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் டோல்கேட்டைக் கடந்து நோக்கிச் சென்றதும், காரை தனியாக ஓரிடத்தில் ஓரமாக நிறுத்தினேன். அப்போது காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த நஷீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக இருந்து பிடித்துக்கொள்ள சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தினர். 

வேறு ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த தௌபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கொலையில் ஈடுபட்டவர்களை  அங்கிருந்து அந்த காரில் வேகமாக சென்றுவிட்டனர்.

மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி இம்ரான் பாஷா, மஸ்தானை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஸ்தான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியதாக நம்பவைத்து ஏமாற்றியதாகக் கூறினார். 

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீன் (எ) சுல்தான், நஷீர், தௌபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

“மஸ்தானின் மரணம் இயற்கையானது அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் தாக்கப்பட்டு, காரில் அடித்துக் கொல்லப்பட்டார்” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

டாக்டா் மஸ்தான் மரணத்தின் மா்மம் குறித்துக் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், நீதிமன்ற காவலில் வைத்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லஞ்சம் கொடுக்க முயற்சி: மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தவறான அறிக்கையை அளிப்பதற்காக பிணவறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க இம்ரான் பாஷா முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com