முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது!

மழை பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி நீர்வரத்தும் குறைந்ததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது!

கம்பம்: மழை பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி நீர்வரத்தும் குறைந்ததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டது சனிக்கிழமையன்று  விநாடிக்கு 511 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. காரணம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழைப்பொழிவு இல்லை.

அணை நிலவரம்

முல்லைப்பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 140.85 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,355 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 234.86 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு,511 கன அடியாகவும் இருந்தது.

குறைந்து வரும் நீர்மட்டம்

தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் டிச.27ல் 142 அடியாக இருந்தது. ரூல் கர்வ் விதியின் கீழ் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 

அதேநேரத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த மறுநாளான டிச. 28-ல் நீர்மட்டம் 141.70 அடியாகவும், டிச. 30-ல் 141.10, டிச.31-ல் 140.85 அடியாகவும்  குறைந்தது.

மேலும் நீர் வரத்து குறைந்த நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்பதால் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி குறைவு

முல்லைப்பெரியாறு அணையில் டிச.27 முதல் டிச.30 வரை தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1,867 கன அடி வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் 168 மெகாவாட் உற்பத்தியானது, டிச. 31ல் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாக குறைந்ததால், பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் சனிக்கிழமை 45 மெகாவாட்டாக மின்சார உற்பத்தி இருந்தது. 

விவசாயிகள் மகிழ்ச்சி

தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை தேக்கி வைப்பதற்காக தண்ணீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. இரண்டாம் போக சாகுபடி முடியும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடிக்கு இந்த தண்ணீர் தேவைப்படும் என்பதால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com