புதுவையில் 2-வது நாளாக மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மின்வெட்டால் மக்கள் அவதி

புதுவையில் மின் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மின்வெட்டால் மக்கள் பாதிப்பு
புதுவையில் மின் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
புதுவையில் மின் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி:  புதுவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடரும் மின்துறை ஊழியர்கள் போராட்டம். இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொது மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்கள்.
இந்த நிலையில், 2வது நாளாக புதன்கிழமை யும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மின்துறை வளாகத்தில் அரசு நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளதால்,  ஊழியர்கள் மின் துறை அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 ஊழியர்களின் போராட்டத்தால், புதுச்சேரி  நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒருசில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல், மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை, பேருந்து சிறைபிடிப்பு, என பல கட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், மின்துறை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள், துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்து உள்ளனர். 
 மின்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், மின் ஊழியர்களை அழைத்து சமாதான பேச்சில் ஈடுபட்டார், அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து,  புதன்கிழமை மாலை முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஊழியர்கள் பேச முடிவு செய்துள்ளனர். அதில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோல்வியில் முடிந்தால் மீண்டும் மூன்றாவது நாளாக நாளையும் போராட்டம் தொடரும் என்று தெரிகிறது. 

இந்த நிலையில், புதுச்சேரி மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள், மற்றும் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மின் ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இந்த போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்துள்ளனர்.
மின் துறை ஊழியர்களின் போராட்டம் தொடருமானால், புதுவை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com