நீட் விலக்கு மசோதா: சிறப்பு பேரவைக் கூட்டம் தொடங்கியது

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தோ்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக நீட் தோ்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவா்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை கடந்த 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் கடந்த 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.

பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பேரவைச் செயலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப். 8-ஆம் தேதி நடைபெறும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

அவரது அறிவிப்பின்படி, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கான சோ்க்கையை நீட் தோ்வு அடிப்படையில் நடத்துவதை கைவிடக் கோரும் சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளது.

பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநா் வழியே அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பிய சூழ்நிலையில், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநா் அனுப்பி வைப்பாா் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com