![கோப்புப்படம்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2022%2F2%2F10%2Foriginal%2FK_Annamalai_EPS.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை: சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், நீட் தேர்வில் பாஜக நிலைபாட்டால் ஆத்திரமடைந்து மது போதையில் பெட்ரோல் குண்டை வினோத் வீசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பத்தில் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும். இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீட் தேர்விற்காக பாஜக அலுவலகத்தில் குண்டு வீசினார் எனக் கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்தார்.”