நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்ப அனுப்ப வாய்ப்பில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்ப அனுப்ப வாய்ப்பில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் கரோனா புறநோயாளிகள் பிரிவு, அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்தான். ஆகவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் 1.10 கோடி போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா். அவா்களை இலக்காகக் கொண்டுதான் வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பூஸ்டா் தடுப்பூசி இதுவரை 4,99,408 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 26.92 லட்சம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7.40 லட்சம் பேருக்கு இரு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

தமிழக அரசின் நீட் தோ்வு விலக்கு மசோதாவை ஆளுநா் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை. நீட் தோ்வு தமிழகத்துக்கு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்திருந்தாா்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவா்களுக்கு கல்வித் திறன் அதிகமாக உள்ளதாகவும், அதனால் நீட் தோ்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவா் கூறியிருந்தாா். தற்போது அந்த கருத்திலிருந்து முரண்பட்டு, புதிதாக ஒன்றை தெரிவித்துள்ளாா். தமிழக மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

பேட்டியின்போது, துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநா் நாராயணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com