கூட்டணியால் தனித்துவத்தை இழக்கும் தலைவர்கள்: சீமான்

கூட்டணி சேருவதால் தான் தமிழகத்தில் தலைவர்கள் பலரும் தங்களது தனித்துவத்தை இழந்து நிற்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம்: கூட்டணி சேருவதால் தான் தமிழகத்தில் தலைவர்கள் பலரும் தங்களது தனித்துவத்தை இழந்து நிற்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சின்னக்காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அனைத்து வேட்பாளர்களும், நிர்வாகிகளும் நேர்மையாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அறிமுகக் கூட்டத்துக்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை சந்திக்கின்றன. தனித்து நிற்க முடியவில்லை. தமிழகத்தில் கூட்டணி சேருவதால் தான் கட்சித் தலைவர்கள் தங்களது தனித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தொல்.திருமாவளவன், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கூட்டணி சேர்ந்ததால் தான் இன்று தனித்துவத்தை இழந்து நிற்கிறார்கள். நான் கூட்டணி சேராமல் தனித்து நிற்பதால் முதலில் ஒரு சதவிகிதமும்,பின்னர் 4 சதவிகிதமாகவும்,இப்போது 7 சதவிகிதமாகவும் வளர்ந்திருக்கிறேன். சொல்லப் போனால் நான் தான் எதிர்க்கட்சி என்று சொல்ல வேண்டும். மக்கள் என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் நான் தனித்துத்தான் நிற்பேன். நான் தோற்றால் மக்கள் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தமாகும்.

தமிழகத்தை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அரசியல் கட்சிகள் இதுவரை மக்களின் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆண்டு தோறும் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீரும், கழிவுநீரும் கலந்து மக்கள் அல்லல்படுவதற்கு ஒரு தீர்வு காணப்படவே இல்லை. மழைநீர் வழிந்தோட அரசுகள் வழி செய்யவே இல்லை. ஆண்டு தோறும் மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படுவது தொடர்கதை போல தொடர்கிறது. கூவத்தை சுத்தம் செய்யவோ அல்லது நெகிழியை முழுவதுமாக தடை செய்யவோ முடியவில்லை. குளம்,குட்டைகளை ஆங்காங்கே அமைத்து நிலத்தடி நீரை உயர்த்தவில்லை.இந்த ஆண்டும் வெயில் காலத்தில் குடிநீருக்காக மக்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள்.

மக்களுக்கு கிடைக்காத குடிநீர் அதை பாட்டில்களில் அடைத்து விற்கும் முதலாளிகளுக்கு கிடைப்பது எப்படி எனத் தெரியவில்லை. அப்பாவி மக்களை தொடர்ந்து ஏதேனும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கொடுத்தே ஏமாற்றிக் கொண்டிருப்பதும் தொடர்கிறது. வாக்குகளை விற்கக்கூடாது, விற்பது அவமானம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இல்லை. அண்ணாவின் பெயரைச் சொல்லி திராவிடக் கட்சிகள் களங்கம் ஏற்படுத்துகின்றன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மேயரை தேர்வு செய்யும் போது யாருக்கும் வாக்களிக்க மாட்டோம். அப்போதும் தனித்தே செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயலர் சால்டின், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கதிர்.ராஜேந்திரன், ஜெகதீச பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com