வாக்கு எண்ணும் பணியில் தவறு நடந்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: எடப்பாடி பழனிசாமி

வாக்கு எண்ணும் பணியில் தவறு நடந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் பேசுகிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. உடன்  முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, மாநகர மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் பேசுகிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. உடன்  முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, மாநகர மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம்.

சேலம்: வாக்கு எண்ணும் பணியில் தவறு நடந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் செய்தவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததை தவறு என முதல்வர் கூறுகிறாரா? முன்னாள் அமைச்சர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 9 மாத கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு துணை போவது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை சட்ட ரீதியாக எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வெற்றி பெற்றால், தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், வாக்கு எண்ணும் மைய அலுவலர்களிடம் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு வார்டு வாரியாக எண்ணி வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டும். பின்னர் வெற்றி படிவத்தை வழங்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்து வார்டுக்கு வாக்கு எண்ண வேண்டும்.

ஆனால், இப்போது அனைத்து வார்டு எண்ணிக்கை முடிந்த பிறகு வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகத் தெரிகிறது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். ஒவ்வொரு வார்டில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ, அவர்களை வெற்றி பெற்றவர்களை அறிவித்து, வெற்றி படிவம் வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தவறு செய்தால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம்.

தேர்தல் ஆணையம், தேர்தல் அலுவலர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக இருக்கக் கூடாது. ஜனநாயக முறைப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வாக்கு எண்ணும் பணியில் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவோம். தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுப்போம்.

கோவை மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, விதிமுறைகளுக்குப் புறம்பாக தங்கி செயல்பட்டு வருகிறார்.

அதிமுக ஆட்சியின்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவினர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கவில்லை. நேர்மையாகத் தேர்தலை நடத்தினோம்.

ஆனால் திமுக அரசு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது.

திமுக தோல்வி பயத்தில் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அதிமுகவுக்கு தோல்வி பயம் எப்போதும் கிடையாது.

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும். வாக்குகள் அதிகம் பெறுபவர்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடாகும்.

தேர்தல் ஆணையம் ஏன் உடந்தையாக உள்ளது? அரசு அலுவலர்களை ஏன் மிரட்டுகிறார்கள் ? தேர்தல் ஆணையம் நடுநிலையோடு, ஜனநாயக முறைப்படி நடந்திட வேண்டும். நீதிமன்றம் தான் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும்.

சென்னையில் அச்சமில்லாமல் வாக்காளர்கள் வாக்கு அளிக்க முடியவில்லை. எனவே தான் அங்கு வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2021 தேர்தலில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com