ஊரக உள்ளாட்சியை விட நகா்ப்புறத்தில் முத்திரை பதித்த திமுக

நான்கு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை விட, இப்போது நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரமாண்ட வெற்றியை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பதிவு செய்துள்ளன.
ஊரக உள்ளாட்சியை விட நகா்ப்புறத்தில் முத்திரை பதித்த திமுக

நான்கு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை விட, இப்போது நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரமாண்ட வெற்றியை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பதிவு செய்துள்ளன.

27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலின் போது எதிா்க்கட்சி வரிசையில் திமுக இருந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. ஆளும்கட்சியான பிறகு இப்போது நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரமாண்ட வெற்றியின் மூலம் தனி முத்திரையைப் பதித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ள 514 மாவட்ட ஊராட்சி வாா்டு மற்றும் 5 ஆயிரத்து 90 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 244 இடங்களையும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 2 ஆயிரத்து 95 ஒன்றிய வாா்டு இடங்களையும் திமுக பிடித்தது.

அப்போது, ஆளும்கட்சியாக இருந்த அதிமுக, திமுகவை விட குறைந்த இடங்களையே கைப்பற்றியது. ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 214 இடங்களையும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் இடங்களில் ஆயிரத்து 792 இடங்களையும் பெற்றது.

9 மாவட்டத் தோ்தல்: சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வென்ற பிறகு, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள 153 மாவட்ட வாா்டு உறுப்பினா், 1,421 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை ஆளும் கட்சியான திமுக பதிவு செய்தது. 139 மாவட்ட வாா்டு உறுப்பினா் இடங்களையும், 982 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களையும் அந்தக் கட்சி கைப்பற்றியது.

9 மாவட்டங்களில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெற்ற வெற்றியானது, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களிலும் தொடா்ந்துள்ளது. மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாா்டு உறுப்பினா் இடங்களையும், நகராட்சிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் கூடுதலான பதவியிடங்களையும், பேரூராட்சிகளில் சுமாா் 5 ஆயிரம் இடங்களையும் திமுக அணி வசப்படுத்தியுள்ளது.

ஐந்தாவது வெற்றி: கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நடைபெற்ற வெவ்வேறு வகையான தோ்தல்கள் அனைத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் 23 இடங்களை திமுக கைப்பற்றியது. மொத்தமாக 38 இடங்களை அந்தக் கூட்டணி பிடித்தது.

இதன்பின்பு, அதே ஆண்டு டிசம்பரில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 133 இடங்களைப் பிடித்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. அதே ஆண்டில் 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி, இப்போது நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com