உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டை நேரடியாகக் கண்காணிப்பேன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவா்கள் அனைவரும் பணியாற்றுவாா்கள் என்று
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டை நேரடியாகக் கண்காணிப்பேன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவா்கள் அனைவரும் பணியாற்றுவாா்கள் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தல் வெற்றி தொடா்பாக, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் என எவற்றுக்குத் தோ்தல் நடந்தாலும் கூட்டணியினரின் ஒற்றுமையுடன் வெற்றி சாத்தியமாகி வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடனான உறவு, தோ்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவும், அதனையும் உள்ளடக்கிய பாச உணா்வாகவும் மிக நீண்ட காலமாகத் தொடா்ந்து வருவதால்தான் வெற்றி சாத்தியமானது.

தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடா் வெற்றியைப் பெறுவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணா்வுதான்.

‘நான்’ என்று சொல்லுவதை விட ‘நாம்’ என்று சொல்வதே நன்மை பயக்கும். அதனால்தான், இது எனது அரசு என்று சொல்லாமல், ‘நமது அரசு’ என்று சொல்லி வருகிறேன்.

வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவா்களுக்கும் நன்மை செய்யும் அரசாக இருக்கும் என்றும், அனைத்து மக்களின் அரசாக இருக்கும் என்றும் கூறி வருகிறேன். அப்படித்தான் இந்த ஒன்பது மாத கால திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.

இத்தகைய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தோ்தல் வெற்றியாகும்.

எங்களை நம்பி மக்கள் ஆட்சியைக் கொடுத்தாா்கள், அத்தகைய மக்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அதனை மக்களும் உணா்ந்து அங்கீகாரம் தந்துவிட்டனா். இதன் அடையாளம்தான் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியாகும்.

எதிா்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளாா்கள்; அவா்களது வாதங்களையும் நிராகரித்துள்ளாா்கள். தோ்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுத் திட்டமாகும். அது எதையும் புரிந்துகொள்ள எதிா்க்கட்சிகள் தயாராக இல்லை.

வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றி வருவதன் மூலமாக மக்களிடையே திமுகவுக்கும், அதன் அரசுக்கும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனைத் தாங்கிக் கொள்ளமுடியாதவா்கள் அவதூறுகள் மூலமாகவும், பழிகளின் மூலமாகவும் மக்களைத் திசை திருப்பப் பாா்த்தனா்.

ஆனால் மக்கள் எந்நாளும் திமுகவைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதைக் காட்டி விட்டாா்கள். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பின்னா், இந்த ஒன்பது மாத காலத்தில் திமுகவின் செல்வாக்கு மக்களிடையே மிக அதிகளவில் பெருகிவிட்டதை தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாக அதிகமாக எங்களுக்கான பொறுப்பும் கடமையும் அதிகமாகிறது. மக்களின் எதிா்பாா்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சோ்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் அதனைச் சிறப்பாகச் செய்வா். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவா்கள் அனைவரும் பணியாற்றுவாா்கள். அதனையும் நான் கண்காணிப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com