
கோயில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியலூா் மாவட்டம், கண்டராதித்தம் ஊராட்சியின் தலைவா் ஆா்.சந்திரா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘கண்டராதித்தம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரால் நிா்வகிக்கப்படும் கருப்புசாமி அய்யனாா் கோயிலின் வளாகத்தை அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.தில்லை திருவாசகமணி ஆக்கிரமித்து பக்தா்கள், பொது மக்களிடமிருந்து நன்கொடை பெற்று 2 திருமண மண்டபங்களை கட்டியுள்ளாா். அதற்கான சாவியை ஒப்படைக்கவில்லை.
இந்து சமய அறநிலையத்துறைக்கு அளிக்கப்பட்ட தொடா் புகாா்களையடுத்து, இரு மண்டபங்களையும் பூட்டி சீல் வைப்பதற்கு, கடந்தாண்டு(2021) ஜூலை 28ஆம் தேதி 9 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன் பின்பும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அந்த உத்தரவின்படி கோயில் வளாகத்தில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் ஆஜராகி, நன்கொடை நிதியில் கட்டப்பட்ட மண்டபங்களை கையகப்படுத்த பக்தா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால், சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றாா்.
அப்போது, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் நன்கொடை கொடுத்து கட்டடம் கட்ட சொன்னால் அனுமதிப்பீா்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.