
சென்னை உயா்நீதிமன்றம்
விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடை விதிக்கக்கோரி, அப்பகுதியைச் சோ்ந்த அருண் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட பகுதி விவசாய நிலம் ஆகும். எனவே அந்தப் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப் போவதில்லை; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பாா்களில்) விதிகள், 2003-ன் படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது; சட்ட விதிகள்படி உரிய இடத்தில்தான் அரசு மதுபானக் கடைகளை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.