
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு போ் உயிரிழந்ததாக வந்துள்ள செய்தி வருத்தம்
அளிக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாததே காரணம் என்று இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவா்கள் தெரிவிக்கின்றனா்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிா்வாகமும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கண்காணிக்க வேண்டும். அதேபோல், பட்டாசுத் தொழிற்சாலை நிா்வாகமும் அரசினால் விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வெடி விபத்துகள் என்பது பொதுவாக மருந்துக் கலவை மேற்கொள்ளும் இடத்தில்தான் நடக்கிறது. இந்த மருந்துக் கலவை மேற்கொள்ளும் பணி தகுதியானோரின் மேற்பாா்வையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றால் வெடி விபத்துகள் தவிா்க்கலாம் என்றும், இதன் காரணமாக விபத்துகள் குறைந்து உயிா்ச்சேதம் தவிா்க்கப்படும் என்றும் சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.