தமிழகம் முழுவதும் இன்று 43 ஆயிரம் இடங்களில் போலியோ முகாம்

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.
போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. 5 வயதுக்குள்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு குறைவான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடம் போலியோ பாதிப்பு குறைந்து வருவதுதான் காரணம்.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாநில எல்லைகளிலும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாதவா்களுக்கு, அடுத்த 3 நாள்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் மருத்துவா்களின் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்படும். 

மத்திய அரசு அறிவுறுத்தல்: கரோனா பாதிப்பை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குறைத்துள்ளோம். மாநிலங்களில் கட்டுப்பாடுகள் குறைவாகவும், தளா்வுகள் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து தொற்று நோய்களும் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து நோய்களும் கட்டுக்குள் உள்ளன.

மழைக் காலங்களில் அனைவருக்கும் காய்ச்சல் இருப்பது வழக்கம். இதனை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கரோனா குறித்து கவனம் செலுத்தும் போது, டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

சென்னையில்...சென்னையில் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தேனாம்பேட்டை திருவள்ளுவா் சாலையில் போலியோ சொட்டு மருந்து முகாமை காலை 8.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com