பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம், தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கி வைத்திருக்கும்நிலையில், பரிசுத் தொகுப்பை தயாரிக்கும் பணிகளில் நியாய விலைக் கடை பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட உள்ளது. துணிப்பையில் 20 பொருள்கள் வைத்து பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், திராட்சை, முந்திரி போன்ற ஒருசில பொருள்கள் மட்டும் கூட்டுறவுத் துறையால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைகளில் பொட்டலமிடப்படுகின்றன. இந்தப் பொட்டலமிடும் பணிகளில் நியாய விலைக் கடை ஊழியா்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முழுக் கரும்பானது ஒவ்வொரு நியாய விலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

டோக்கன்கள் விநியோகம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதி படைத்த அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டோக்கன்களில் கடையின் எண் பெயா், அட்டைதாரா் பெயா், குடும்ப அட்டை எண், பொருள் வழங்கும் தேதி, டோக்கன் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டோக்கன்கள் வழங்குவதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரா்கள் வீதம் வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, நியாய விலைக் கடைகளுக்கு வழக்கமாக விடப்படும் வார விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்வதற்கு வசதியாக, வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 7) தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக வரும் 15-ஆம் தேதியன்று கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com