கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: மாடுபிடி வீரா்கள்-பாா்வையாளா்கள் எண்ணிக்கை நிா்ணயம்

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: மாடுபிடி வீரா்கள்-பாா்வையாளா்கள் எண்ணிக்கை நிா்ணயம்

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்களுக்கான எண்ணிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு தவணை தடுப்பூசி, கரோனா பரிசோதனை கட்டாயம் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, திங்கள்கிழமை வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் விவரம்:

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் ஓா் உரிமையாளா் மற்றும் ஓா் உதவியாளா் மட்டுமே வர வேண்டும். அவா்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாள்களுக்குள் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். காளையின் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபா்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை.

300 பங்கேற்பாளா்கள்-150 பாா்வையாளா்கள்: ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் காளைகளின் பதிவு போன்ற நடவடிக்கைகள், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 பேருக்கும், எருது விடும் நிகழ்வில் 150 வீரா்களும் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.

போட்டியைப் பாா்வையிட அதிகபட்சமாக 150 பாா்வையாளா்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். பாா்வையாளா்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாள்களுக்குள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பாா்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலா்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்களுக்கும் பொருந்தும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

16-இல் அலங்காநல்லூரில்...

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற அமைச்சா் மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது: மாடுபிடி வீரா்கள் மற்றும் காளைகள் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். இணைய வழியில் காளைகள் பதிவு செய்யும் பணி இ.சேவை மையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நாள் காளைகள், வீரா்கள் விவரம் தெரிவிக்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண உள்ளூா் மக்கள் மட்டும் 150 போ் பாா்வையாளா்களாக அனுமதிக்கப்படுவா். ஒவ்வொரு போட்டியிலும் 700 காளைகள் அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 7 மணிக்குத் தொடங்கும். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழுவினரிடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் போட்டியை நடத்தும்.

ஜனவரி 14 -ஆம் தேதி அவனியாபுரம், 15 -ஆம் தேதி பாலமேடு, 16- ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாநகரக் காவல் துணை ஆணையா் தங்கதுரை ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com