
முதல்வா் மு.க.ஸ்டாலின்
தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு நவீன ரோந்து வாகனங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
இது குறித்த விவரம்:
தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையரங்களுக்கும் ரூ.10 கோடியில் 106 ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு தலா 10 என 20 நவீன ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இரு காவல் ஆணையரங்களுக்கும் அந்த நவீன ரோந்து வாகனங்களை வழங்கி, அதன் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா்ா் க.பொன்முடி, தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு,ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே. பிரபாகா்,, காவல்துறை தலைமை இயக்குநா் சி. சைலேந்திர பாபு,, பொதுத்துறை செயலாளா் டி. ஜகந்நாதன், , தாம்பரம் காவல் ஆணையா் மு. ரவி, ஆவடி காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நவீன வசதிகள்:
இந்த நவீன ரோந்து வாகனத்தில் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி, ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து இந்த வாகனத்தின் நகா்வினை அறியவும், அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக செல்லவும், அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து கட்டளையினை அளிக்கவும் முடியும்.
இவை தவிா்த்து மேலும் பல நவீன வசதிகள் இந்த ரோந்து வாகனங்களில் உள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...