தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்பமனு: அதிமுக அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உரிய கட்டண தொகையை செலுத்தி அ.தி.மு.க.வினர் விருப்ப மனுவை பெறலாம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உரிய கட்டண தொகையை செலுத்தி அ.தி.மு.க.வினர் விருப்ப மனுவை பெறலாம் என்று அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சித் தொண்டர்களிமிருந்து ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒருசில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஒருசில பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தகைய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், கட்சியின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கட்சி அலுவலகங்களில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் கட்டணத் தொகை
மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் 5,000
நகர மன்ற வார்டு உறுப்பினர் 2,500

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அதற்கான விருப்ப மனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்களைப் பெற்றுச் சென்று, அது சம்பந்தமான விபரங்களை கட்சித் தொண்டர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி
மனு அளிப்பவர்கள் மட்டுமே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com