

சென்னை: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் தொற்று பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
வாரந்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 18 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 88 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 65 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 34.70 கோடி; பலி 5.60 லட்சத்தை கடந்தது
இந்த நிலையில், 19-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்ஔறு நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம்.
1,71,616 சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 6 சதவிகிதம் பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94 சதவிகிதம் பேர் வீட்டுத்தனிமையில் இருந்து வருகின்றனர்.
2,580 ஊராட்சிகளில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 94.19 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 74.11 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 21 மாநகராட்சிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.
உருமாற்றம் அடைந்த கரோனா உள்பட அனைத்து வகை கரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு. இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.