ஆன்லைன் கொள்முதல் பதிவுக்கு எதிர்ப்பு: விக்கிரபாண்டியத்தில் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் விக்கிரபாண்டியத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரப் பாண்டியத்தில் நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள்.
விக்கிரப் பாண்டியத்தில் நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் விக்கிரபாண்டியத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவிப்பு செய்திருந்தது.

அண்மையில் மன்னார்குடியில் நடைபெற்ற காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுடன் நெல் கொள்முதல் குறித்து காணொலிக் காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகளை தெரிவித்தனர்.

இதற்கு அமைச்சர், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் உணவுக் கழகம் எடுத்துள்ள முடிவு என்றும், இந்த வசதியை பயன்படுத்தினால் தான் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும் என மத்திய உணவுக் கழகம் தெரிவித்திருப்பதாவும் கூறினார். எனவே, விவசாயிகளுக்கு பிரச்னை ஏற்படாதவாறு ஆன்லைன் பதிவினை கொள்முதல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விக்கிரபாண்டியம் ஊராட்சியை சேர்ந்த அனைத்து விவசாயிகள் சார்பில் நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விக்கிரபாண்டியம் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் சிவ.கதிரவன், சீனி.சோமசுந்தரம், இ. சங்கர் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து, மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறையினர், டிஎன்சிஎஸ்சி அலுவலர்கள் மறியலில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com