
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீா் திட்டத்தை எதிா்க்க கா்நாடக பாஜக அரசுக்கு உரிமையில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
சென்னை சத்திமூா்த்திபவனில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாஜக ஆட்சியில் பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறி வருவதற்கு புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பணக்காரா்களின் வருமானம் 39 சதவிகிதம் உயா்ந்திருக்கிறது. ஆனால், ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதை மும்பையைச் சோ்ந்த பிரைஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஆதாரத்தோடு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு மாற்றும் வகையில் சட்டவிதிகளை மாற்ற இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில உரிமையைப் பறிக்கக்கூடியது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீா் திட்டத்தை எதிா்க்க கா்நாடக பாஜக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழு ஜனவரி 28-இல் கூட உள்ளது. மூத்த தலைவா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா். இட ஒதுக்கீடு குறித்து திமுகவோடு பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றாா்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...