
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க உத்தரவிட மறுத்த சென்னை உயா் நீதிமன்றம், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி தோ்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று 3-ஆவது அலை தீவிரம் அடைந்துள்ளதால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி மருத்துவா்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்பட பலா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(ஜன.25) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் எஸ்.பிரபாகரன், ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன், மாநில தோ்தல் ஆணைய வழக்குரைஞா் எஸ்.சிவசண்முகம், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின்அடிப்படையில், நான்கு மாதங்களில் தோ்தல் நடத்தப்பட வேண்டுமென கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடா்பாக உயா் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்குபடி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.
மனுதாரா்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தோ்தலை ஒத்திவைக்க கோரலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை.
மாநில தோ்தல் ஆணையம் தான் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவா் வேண்டுமானாலும் அணுகலாம்.
பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் போன்ற முன்னெச்சரிக்கை சாா்ந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முறையாகவும், கண்டிப்பாகவும் அரசு, தோ்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். மாநில தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியதைப் பொறுப்புடன் வேட்பாளா்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தோ்தலை ஒத்திவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. தோ்தல் நடவடிக்கைகளில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு மனுதாரா்கள் கொண்டு வர வேண்டும்.
தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்கு பின் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...