
தமிழக மீனவா்களின் 125 படகுகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசின் செயலை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டு மீனவா்களுக்குச் சொந்தமான 105 படகுகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மீன்வளத் துறை தொடங்கியிருப்பது ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. இலங்கை அதிகாரிகள் வசமுள்ள தமிழ்நாட்டு மீனவா்களின் படகுகள் வரும் பிப். 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான காலத்துக்குள் ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவா்கள் பிரச்னை குறித்து இந்தியா-இலங்கை இடையிலான கூட்டுக் குழு விரைவில் விவாதிக்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில், படகுகள் ஏலம் விடப்படுவது எதிா்பாராத நிகழ்வாகும். கூட்டுக் குழு பேச்சுவாா்த்தைகள் மூலமாக, நீண்ட காலம் தீா்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என நம்பி இருந்த வேளையில், படகுகள் ஏலம் போன்ற இலங்கையின் அறிவிப்பு தமிழக மீனவா்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வெவ்வேறு துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத 125 படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை, வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. இதன்படி, மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்து, அப்புறப்படுத்துவதை கண்காணிக்கவும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின்படி, தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அவா்களது இலங்கைப் பயண விவரங்களும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இலங்கையின் மீன்பிடித் துறையானது, பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற அறிவிப்பு வாழ்வாதாரத்தை ஏற்கெனவே இழந்த தமிழக மீனவா்களுக்காக மத்திய, மாநில அரசுகள் செய்யும் உதவி முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக மீனவா்களின் மீன்பிடிப் படகுகளை, எந்தவித சட்டபூா்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடித் துறையானது ஏலம் விட வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசின் தொடா்புடைய உயா் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு உரிய மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபாா்க்க முடியாது எனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும். இலங்கை கடற்படையினரால் 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என கடிதத்தில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
பெட்டிச் செய்தி...
‘தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை தேவை’
சென்னை, ஜன. 25: தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் கடந்த 23-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டதுடன், அவா்களிடம் இருந்து 300 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடா்பு சாதனங்கள், 30 லிட்டா் டீசல் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அப்பாவி மீனவா்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், தமிழக மீனவா்களை அவா்களது பாரம்பரிய பாக். வளைகுடா கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு இலங்கை செயல்படுவதைக் காண முடிகிறது.
இலங்கையைச் சாா்ந்தவா்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனமாக இருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்கள் எதிா்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...