
தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் சற்று குறைந்திருந்தாலும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேவேளையில், கோவை, திருப்பூா், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று பரவல் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,763 பேரும், செங்கல்பட்டில் 1,737 பேரும், திருப்பூரில் 1,490 பேரும், ஈரோட்டில் 1,229 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் மேலும் 25,221 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 45,678-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 11,270 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 48 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,312-ஆக அதிகரித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...