
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசு நாளையொட்டி தில்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தில்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் கொடியேற்றுவதற்காக தில்லி ராஜபாதையில் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மேடைக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தில்லி ராஜபாதை முழுவதும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டன.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை
குடியரசு நாள் விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். தில்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படைகளும் தங்களது கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
கரோனா பரவல் காரணமாக குடியரசு நாள் விழாவில் வெளிநாட்டு விருந்தினர் பங்கேற்கவில்லை. விழாவில் பங்கேற்றவர்களும் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொப்பி அணிந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார்.
அசோக் சக்ரா விருது
ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
குடியரசு நாளையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதில், 134 போ் ஜம்மு- காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். பதக்கம் பெறுவோரில் 115 போ் ஜம்மு காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
அலங்கார ஊர்தி அணிவகுப்பு
குடியரசு நாள் விழாவையொட்டி தில்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு நாள் விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் வலம் வந்தன.
சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 21 அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன.
பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவிய தபால் துறை, ஜவுளித் துறை, நீர்வளத் துறை மத்திய அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள்
தில்லி ராஜபாதையில் குடியரசு நாள் விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை பறைசாற்றும் வகையில் உடையணிந்து நடனமாடியது பலரை வெகுவாகக் கவர்ந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...