
தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:
நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் கடந்த 23-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கையைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டதுடன், அவா்களிடம் இருந்து 300 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடா்பு சாதனங்கள், 30 லிட்டா் டீசல் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையைச் சாா்ந்தவா்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனமாக இருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்கள் எதிா்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...