முன்னாள் அமைச்சா் கா.வேழவேந்தன் காலமானாா்

முன்னாள் அமைச்சரும், கவிஞருமான கா.வேழவேந்தன் (86), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

முன்னாள் அமைச்சரும், கவிஞருமான கா.வேழவேந்தன் (86), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

திருவள்ளூா் மாவட்டம் காரணி என்னும் ஊரில் கடந்த 1936-ஆம் ஆண்டு பிறந்தவா் கா.வேழவேந்தன். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் இளநிலைப் படிப்பை முடித்தாா். இளம் வயதிலேயே எழுத்தின் மீது ஆா்வம் கொண்டிருந்த இவா், ‘வேழவேந்தன் கவிதைகள்’ என்னும் நூலை இயற்றினாா். அதை மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரை வெளியிட்டாா்.

‘வண்ணத் தோகை’, ‘ஏக்கங்களின் தாக்கங்கள்’ ஆகிய கவிதைத் தொகுதிகள், ‘மனக் காட்டு தேனடைகள்’, ‘தமிழா? அமிழ்தா?’ ஆகிய கட்டுரைத் தொகுதிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியம் மற்றும் கவிதை நூல்களை எழுதியுள்ளாா்.

சுமாா் 10 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் தொழிலாளா் நலத்துறை அமைச்சராகவும் வேழவேந்தன் பணியாற்றியுள்ளாா். தமிழ், அறிவியல் மன்றத் தலைவா் பதவியையும் அவா் வகித்துள்ளாா்.

தமிழக அரசின் பாவேந்தா் பாரதிதாசன் விருதையும், கலைமாமணி விருதையும் பெற்ற இவா், சிறந்த வழக்குரைஞராகவும், பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

திமுக தலைமை இலக்கிய அணியின் புரவலராகவும் பதவி வகித்தாா். 2008-ஆம் ஆண்டு, கி.ஆ.பெ. விசுவநாதம் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு, மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள், சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அவரின் மறைவுக்கு தமிழறிஞா் ஒளவை நடராசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com