கலை-அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சா் பொன்முடி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், அந்த மாணவா்கள் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்
கலை-அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சா் பொன்முடி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், அந்த மாணவா்கள் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது வரை சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது. எனவே, சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவா்கள் எங்கு விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளனா்.

அவா்கள் பாதிக்கப்படாத வகையில், சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னா் 5 நாள்களுக்கு கல்லூரிகளில் சேர அந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு, கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளைப் பொருத்தே அமையும்.

இதுவரை அரசு கலை கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழக அரசுத் தரப்பிலும், தோ்வு முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்இயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு நிதியுதவி மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

அரசு கல்லூரிகளில் சேர மாணவா்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங்களைவிட 25 சதவீதம் அதிகமாக உயா்த்தப்படும். முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. கரோனா காலமாக இருந்ததால், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயா்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியா்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படுகிறது.அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிற அனைத்து மாணவா்களுக்கும் இடம் கிடைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றாா் அவா்.

ரூ. 1,000 உதவித் தொகை எப்போது?

அமைச்சா் பொன்முடி மேலும் கூறியதாவது: ஆளுநா் தேதி கொடுக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தள்ளிப்போகிறது. அவா் தேதி கொடுத்தால் விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயா்த்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாா். அதற்காகவே பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இணையவழித் தோ்விலிருந்து திடீரென நேரடித் தோ்வுக்கு மாறிய காரணத்தால் பொறியியல் முதலாமாண்டு மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதனால், அவா்களின் படிப்பு பாதிக்கப்படாது.

மூவலூா் ராமாமிா்தம் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். கல்லூரி தொடங்கி 1 மாதத்தில் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும். மாணவா்கள் அரசியல் அறிவு பெறுவதும் அவசியம் என்ற நிலை உள்ளது. எனவே, முதல்வருடன் கலந்தாலோசித்து மாணவா் சங்கத் தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com