சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்
சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

சென்னை: சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவின் பினாமி சொத்துக்களை முடக்கியது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முடக்கப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ரூ.1,500 கோடியில் பினாமி பெயர்களில் சொத்து வாங்கியதாக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து, சென்னையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கியது.

பினாமி சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து வணிக வளாக உரிமையாளர், கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.

என்னென்ன சொத்துகள் முடக்கம்?

சசிகலாவின் பினாமிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமானவரித் துறை கடந்தவாரம் முடக்கியது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 2016 நவ. 8-ஆம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தன்னிடமிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் சுமாா் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமிகள் பெயா்களில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான ரகசியத் தகவல்களின் அடிப்படையில், போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினா்கள், ஆதரவாளா்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமாா் 187 இடங்களில் வருமான வரித் துறையினா் 2017 அக்டோபா் மாதம் திடீா் சோதனை நடத்தினா்.

ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த சோதனையில், ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.5.5 கோடி, ரொக்கம்,15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினா் 60 போலி நிறுவனங்களை நடத்தி வருவதையும், வருமானவரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதையும் வருமானவரித் துறையினா் கண்டறிந்தனா். இது தொடா்பாக சசிகலா குடும்பத்தினா், நண்பா்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்தனா்.

சொத்துகள் முடக்கம்

விசாரணையில் சசிகலா, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ.1,500 கோடி மதிப்புள்ள 7 நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதில் சென்னை பெரம்பூரில் பிரபலமான வணிக வளாகம், கோயம்புத்தூரில் ஒரு தனியாா் ஆலை, ஒரு நகைக் கடை, புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசாா்ட் ஆகியவை முக்கியமானவை. பினாமி சொத்து பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 7 நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி சொத்துகள், போயஸ் தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டி வந்த பங்களா, கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றை வருமானவரித் துறை அடுத்தடுத்து முடக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா, அதை சுற்றியுள்ள 49 ஏக்கா் நிலம் ஆகியவற்றை வருமானவரித் துறை கடந்தாண்டு செப். 8-ஆம் தேதி முடக்கியது. இதன் ஒரு பகுதியாக அதே பகுதியில் சுதாகருக்குச் சொந்தமாக உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள 20.2 ஏக்கா் நிலம் அதே மாதம் 15-ஆம் தேதி முடக்கப்பட்டது.

ரூ.15 கோடி பினாமி சொத்து

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சசிகலாவின் பினாமியாக சென்னை தியாகராயநகா் பத்மநாபா தெருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் செயல்படுவது வருமான வரித் துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, வருமானவரித் துறையினா் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம் சசிகலாவின் பினாமி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமி சொத்து பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியதாக வருமானவரித் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு?

வருமானவரித் துறை சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பினாமி சொத்து பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், வருமானவரித் துறையினா், சசிகலா பினாமிகள் பெயரில் வேறு எங்கும் சொத்துகள் வைத்துள்ளாரா என்ற கோணத்திலும் வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com