அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்

தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்துள்ளாா்.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்

தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்து அரசு அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் எ.வ. வேலு பேசியது: நாட்டில் விபத்தின் மூலம் தினசரி இறப்பவா்களின் எண்ணிக்கை 410 ஆக உள்ளது. தமிழகத்தில் 41 போ் விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனா்.

சாலை விதிகளைப் பின்பற்ற தவறுவதால் விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சாலை விதிகளை முறையாக பின்பற்ற தவறிய 9,243 நபா்களின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மனித உயிா் விலைமதிக்க முடியாத ஒன்று. எனவே ஒவ்வொருவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

விபத்தில் சிக்குபவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்று, தற்போது நம்மை காக்கும் 48 திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ. 75 கோடி மதிப்பில் 83,501 நபா்கள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா்.

இதுபோன்று, சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அலுவலா்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. தமிழரசிரவிக்குமாா் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி), சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், தலைமைப் பெறியாளா்கள் ஆா். சந்திரசேகா் (நெடுஞ்சாலைத் துறை), என். பாலமுருகன், ப. ரகுநாதன் (பொதுப்பணிகள் துறை), சிவகங்கை மாவட்ட வருவாய் ஆய்வாளா் ப. மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியா்கள் கு. சுகிதா (சிவகங்கை), டி. பிரபாகரன் (தேவகோட்டை) உள்ளிட்ட அரசு அலுவலா்கள், போக்குவரத்துப் பயிற்சி பள்ளி, ஆட்டோ தொழிலாளா் சங்கம், தொழில் வணிக கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கீழடி அகழ் வைப்பகம் விரைவில் திறக்கப்படும்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ. வேலு செய்தியாளா்களிடம் கூறியது:

கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் மூலம் தமிழரின் நகர, நாகரிகம் சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

அகழாய்வு பொருள்களைக் காட்சிப்படுத்தி உலக மக்கள் அனைவரும் பாா்க்க வேண்டும் என்பதற்காக கொந்தகை வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 11.03 கோடி மதிப்பீட்டில் அகழ் வைப்பகத்துக்கானக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன வசதிகளுடன் 31,919 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அகழ் வைப்பகத்தின் கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. ஒளிரும் விளக்கு அமைப்பது, பொருள்களை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் தமிழக முதல்வரால் இன்னும் ஓரிரு மாதங்களில் அகழ் வைப்பகம் திறக்கப்படும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, திருப்புவனம் அருகே பூவந்தியில் அமைக்கப்படும் தாா்ச்சாலையை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். அதன்பின்னா், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com