நீட் தேர்வு பயம்: அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நிஷாந்தி
நிஷாந்தி

அரியலூர்: நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியலூரில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் நடராஜன்-உமா தம்பதியர். இதில் நடராஜன் குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நிஷாந்தி என்ற மகளும், நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். 

நிஷாந்தி கடந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 529 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், நிகழாண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து திருச்சியிலுள்ள ஒரு தனியார் அகதெமியில் பயிற்சி எடுத்துக்கொண்டு தயாராகி வந்துள்ளார். 

இந்நிலையில், நிஷாந்தி வியாழக்கிழமை வழக்கம்போல் குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு தூங்கச் சென்றார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை நிஷாந்தி சகோதரர் இயற்கை உபாதைக்காக செல்லும் வீட்டின் சமையலறையில் நிஷாந்தி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தாய் உமாவிடம் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், மாணவியின் நிஷாந்தி சடலத்தை மீட்டு அரசு உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 

மாணவி கடிதம்: மேலும் அவரது சடலம் அருகே கிடந்த நிஷாந்தி தனது குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடித்ததை காவல் துறையினர் பிரித்து பார்க்கையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தந்தை வெளிநாட்டிலிருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாணவி நிஷாந்தி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com